இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மக்களின் இறையாண்மைக்கு கிடைத்த வெற்றியாக, இன்றைய பதவியேற்பு நிகழ்வை தாம் பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாறாக தனக்கோ ஐக்கிய தேசியக் கட்சிக்கோ கிடைத்த வெற்றி இதுவல்ல என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமராக இன்று பதவியேற்றதன் பின்னர் அலரிமாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, நாட்டின் அரசியலமைப்பை உறுதிப்படுத்தப்படுவதற்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வினை ஏற்படுத்தி, வழமை நிலைக்கு கொண்டுவந்து பொருளாதாரத்தை முன்னேற்றுவோம் என உறுதியளித்த பிரதமர் ரணில், நாடாளுமன்றமும் நீதிமன்றமும் உரிய வகையில் செயற்பட்டமை குறித்து பெருமையடைவதாக சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கடந்த சில வாரங்களாக தடைப்பட்ட அபிவிருத்தி பணிகளை தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் பிரதமர் ரணில் உறுதியளித்தார்.