இலங்கையில் 43 வருடங்களில் முதல்முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு தூதர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
போதைப் பொருள் தொடர்பான குற்றம் சுமத்தப்பட்ட நான்கு பேரை தூக்கிலுடப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று பிரதமர் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின்போது ஜனாதிபதியின் முடிவுக்கு அவர்கள் கவலை தெரிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில், பாலியல் துஸ்பிரயோகம், போதைப் பொருள் கடத்தல் மற்றும் கொலை ஆகியவற்றுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட போதும் அது கடந்த 1976ஆம் ஆண்டிருந்து அமுல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் நாட்டில் நடைபெற்றுவரும் போதைப் பொருள் வர்த்தகத்தை தடுக்கவே அங்கு மீண்டும் மரண தண்டனை கொண்டு வரப்படுகிறது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அவரது இந்த முயற்சி, இந்த வருடத்தின் இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதிக்கு சிறந்த புகழை பெற்றுத்தரும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.