கல்முனை பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தும் அமைச்சரவை பத்திரத்தை செவ்வாய்க்கிழமை சமர்ப்பிப்பதாக பிரதமர் சொல்லியுள்ளார்.
ஆனால், எந்த செவ்வாய்கிழமை என்பதில் அவருக்கும் குழப்பம் உள்ளது. வாக்குறுதி வழங்குவதில் ரணில் விக்கிரமசிங்க வல்லவர் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி, பா.அரியநேந்திரன்.
கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த கோரி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்முனை தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தும் கோரிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு நீண்டகாலமாக வைத்து வருகிறது. எனினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் அதற்கு தடையாக இருந்து வருகிறார்கள்.
கலமுனையை தரமுயர்த்தி தருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல தடவை வாக்குறுதியளித்துள்ளார். அவர் வாக்குறுதி வழங்குவதில் வல்லவர். கடந்த 52நாள் அரசியல் குழப்பத்தின் போதும், வாக்குறுதி கொடுத்தார்.
நேற்று கூட்டமைப்பின் எம்.பிக்கள் மாவை, சிறிநேசன் ஆகியோர் பிரதமரை சந்தித்து கல்முனை பற்றி அழுத்தம் கொடுத்தனர்.
வரும் செவ்வாய், அல்லது அடுத்த செவ்வாய் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் வாக்குறுதியளித்துள்ளார். இரண்டு செவ்வாய்கிழமைகளை ரணில் சொல்லிள்ளார். ஆனால் எந்த செவ்வாய்க்கிழமை என்பது ரணிலுக்கே தெரியாமல் உள்ளது.
இரண்டு செவ்வாய்க்கிழமைகளின் பின்னரும், அவர் தரமுயர்த்தாவிட்டால், கூட்டமைப்பின் ஆதரவை வாபஸ் பெறுவோமென்று எமது எம்.பி, யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனையை தரமுயர்த்துவதா? ஆதர இழப்பதா என்பதை பிரதமர் முடிவு செய்யட்டும்.
ஹரீஸ் எம்.பி என்ற தனிநபரின் வாக்குவங்கிக்காக மாத்திரமே கல்முனை பிரதேசசெயலகம் தரமுயர்த்த எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
அவருக்காக தொடர்ந்தும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை புறக்கணிக்கப்படுமென்றால் பெரும் விளைவுகள் ஏற்படும்“ என்றார்.