Thursday , November 21 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ரஜினி கமல் சினிமாவை விட்டு விலகுவார்களா?

ரஜினி கமல் சினிமாவை விட்டு விலகுவார்களா?

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள மீடியாக்களிலும், இந்திய அளவிலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பவன் கல்யாண் ஆகியோரது அரசியல் பிரவேசம் பற்றி கடந்த சில மாதங்களாகவே பல்வேறு செய்திகளும், கட்டுரைகளும் வந்து கொண்டிருக்கின்றன. டி.விக்களிலும் அடிக்கடி விவாதங்கள் நடந்து வருகின்றன.

தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் ஆக இருக்கும் பவன் கல்யாண் கடைசியாக நடித்து வெளிவந்த மூன்று படங்களும் தோல்வியடைந்து பெரிய நஷ்டத்தைக் கொடுத்துள்ளன. ஆனால், பவன் கல்யாண் தீவிர அரசியலில் இறங்கி, அவருடைய சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துவிட்டார். அதனால், அவர் அடுத்து ஆண்டு தெலுங்கானா, ஆந்திரா மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்து முடியும் வரை படங்களில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், கமல்ஹாசன் அவருடைய அரசியல் பயணத்தை பிப்ரவரி மாதத்தில் இருந்து பயணமாகவே ஆரம்பிக்கிறார். ரஜினிகாந்த் அவருடைய ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கும் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அரசியல் களத்தில் ஏற்கெனவே உள்ள நடிகர்களான விஜயகாந்த், சரத்குமார், சீமான் ஆகியோரும் ரஜினி, கமல் ஆகியோரது அரசியல் பிரவேசம் பற்றி கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.

தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்றால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினால் மட்டுமே மக்களுக்காக சேவை செய்யவே நாங்கள் அரசியலுக்கு வருகிறோம் என ரஜினியும், கமலும் கூறுவது போல் நடக்க முடியும். ஆனால், அவர்கள் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு அரசியலிலும் ஈடுபட்டால் மக்கள் அவர்களை எந்த அளவிற்கு நம்புவார்கள் என்று தெரியாது என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

2019ம் ஆண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகவே தமிழ்நாடு அரசியல் களத்திலும் பல மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் அவர் கைவசம் வைத்துள்ள ‘2.0, காலா’ இரண்டு படங்களையும் நடித்து முடித்துவிட்டார். அவருடைய அடுத்த படம் என்ன என்பது இன்னும் முடிவாகவில்லை. கமல்ஹாசன் ‘விஸ்வரூபம் 2’ படத்தை விரைவில் வெளியிட உள்ளார். அடுத்து ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க உள்ளார். அரசியலுக்காக இருவரும் சினிமாவை தியாகம் செய்வார்களா என்பது இனி வரும் காலங்களில் அரசியல் களத்தில் அவர்களை நோக்கி எழும் பெரிய கேள்வியாக இருக்கும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv