Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / லட்சத்தீவுகளில் பயங்கர மழை

லட்சத்தீவுகளில் பயங்கர மழை

வங்க கடலில் கன்னியாகுமாரி அருகே நிலை கொண்டிருந்த ஓகி புயல் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரியை கனமழை புரட்டி போட்டது. ஓகி புயல் தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவை நோக்கி சென்றது. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து நீங்கியது.

அரபிக்கடலில் லட்சத்தீவுக்கு மேலே நிலை கொண்டுள்ள ஓகி புயலின் தாக்கத்தால் லட்சத்தீவுகளில் பலத்த காற்றுடன் பேய்மழை பெய்தது. காற்றின் வேகத்தில் அங்குள்ள வீடுகள் சேதம் அடைந்தன. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. கனமழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்ததால், கல்பேனி தீவில் ஐந்து படகுகள் சேதம் அடைந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஓகி புயல் லட்சத்தீவின்மேல் நிலை கொண்டு இருப்பதால், இன்னும் 24 மணி நேரத்திற்கு அங்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓகி புயலானது அடுத்த 24 மணிநேரத்திற்கு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர், பின்முகமாக வடகிழக்கு திசையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிழக்கு கல்பேனி, மினிகோய் ஆகிய பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. அங்குள்ள சேத நிலவரங்கள் இன்னும் முழுமையாக மதிப்பிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மணிக்கு 145 கி.மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடற்கரைகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. நேற்று, நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்த 218 மீனவர்கள் பத்திரமாக கடலோரப்படை, விமானப்படை உதவியால் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மீனவர்களில் 60 பேர் ஜப்பான் சரக்கு கப்பலால் மீட்கப்பட்டனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv