இராணுவத்தினரை விசாரணை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லை என்று மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
எங்கள் முடிவில் தெளிவாக இருகக்கின்றோம். எமது நீதித்துறை எமக்கு போதுமானது. இந்த நாட்டில் நடைபெற்றதாக கூறப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான இயலுமையை இந்த அரசாங்கம் கொண்டுள்ளது. அதேபோல் மனித உரிமைகள் பேரவையில் எவ்வாறான தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும் சுயாதீனமான அரசு என்ற வகையில் நாம் முடியுமான மற்றும் செய்யவேண்டிய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
குற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கையில் நாட்டில் நிலவும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் குழப்புதவதற்கு வாய்ப்பளிக்க முடியாது. இலங்கை இராணுவம் சட்டத்திற்கு உட்பட்டு தீவிரவாதத்திற்கு எதிராக போரிட்டனர். இன்றைய சூழ்நிலையில் தீவிரவாதத்தின் தீவிரத்தன்மை சர்வதேச நாடுகளில் உணரப்பட்டுள்ளது. பிரித்தானியா நாடாளுமன்ற வளாக தாக்குதல், பிரான்ஸ் தாக்குதல் போன்ற விடயங்கள் இதற்கு உதாரணம். முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 12,000 பேர் இன்று நாட்டில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆகவே யுத்தக் குற்றம் பற்றி யாராவது பேசுவார்களாயின் முதலில் அவர்களையே கைது செய்ய வேண்டும். அது முடியுமா என்பது தொடர்பில் முதலில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ச செய்த மிகப்பெரிய முட்டாள்தனம் அவர்களை விடுதலை செய்தமையே. அந்த 12,000 பேரையும் கைதுசெய்ய வேண்டும் அது முடியுமா? அதேவேளை தனிப்பட்ட ரீதியில் யுத்தத்தின்போது இராணுவத் தரப்பில் யாராவது தவறிழைத்திருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்து தண்டனை வழங்குவதற்கு நாம் எதிராக இருக்கப்போவது இல்லை. அதனை செய்ய வேண்டும்.
எனினும் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தை விசாரணை செய்ய அனுமதிக்கப்போவது இல்லை. ஜனநாயகத்தை பதுகாக்க யுத்தத்தில் ஈடுபட்டவர்களை நாம் ஒருபோதும் விசாரணை செய்ய அனுமதிக்கப்போவது இல்லை. அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட பாதுகாப்பு தரப்பிற்கு தண்டனை வழங்குவதை நாம் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்று திட்டவட்டமாக சர்வதேச நீதிபதிகளை நிராகரித்தார்.