கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கிளிநொச்சியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் பின்னர் மாவட்டச் செயலகம் வரை சென்று மாவட்ட அரச அதிபருக்கான மகஜர் மேலதிக மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
பொது மக்கள் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தகுதியில்லாதவர்கள் என பேசியிருந்ததை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
உங்கள் பொய்களை நிறுத்துங்கள் எங்கள் வேலைக்கு அடிப்படைத் தகுதியுண்டு , மன்னிப்புக் கேள் எங்கள் மீதான உங்கள் பொய்களை நிறுத்துங்கள், போதுமான தகுதியிருக்கும் எங்களிடம் தாங்கள் எதிர்பார்க்கும் தகுதி என்ன? சமுர்த்தி படையணியில் கை வைக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே, சங்கத்தின் பொருளாலாளர் கிளிநொச்சி சமுர்த்தி சங்க தலைவர் சங்கர், மன்னார் சமுர்த்தி சங்கத்தின் செயலலாளர், கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.