உடல்நிலை சரியில்லாத தாயைச் சொந்த மகனே மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த கொடூர சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது.
சந்தீப் நத்வானி என்பவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வந்தார். இவரின் 64 வயது தாயார் ஜெயாஸ்ரீ பென் (Jayshreeben) பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஜெயாஸ்ரீ மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காவல்துறை சந்தீப்பிடம் விசாரித்தபோது தன் தாய் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.
ஜெயாஸ்ரீயின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஜெயாஸ்ரீயின் உடல்நிலையைப் பார்க்கும்போது அவர் தானாக நடந்து சென்று மாடியிலிருந்து கீழே குதிக்க வாய்ப்பில்லை’ என்று மருத்துவர்கள் போலீஸிடம் தெரிவித்துள்ளனர். இதனால் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
சந்தீப் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜெயா ஸ்ரீ பலியான அன்று சந்தீப் ஜெயாஸ்ரீயை வலுக்கட்டாயமாக மாடிக்கு இழுத்து செல்கிறார்.
சிறிது நேரத்தில் சந்தீப் மட்டும் மாடியிலிருந்து கீழே இறங்கிவந்து தன் வீட்டுக்குள் சென்று தாழிட்டுக்கொள்கிறார். சற்று நேரத்தில் ஒருவர் வந்து சந்தீப் வீட்டின் கதவைத் தட்டி ஜெயா ஸ்ரீ கீழே விழுந்துகிடப்பதைத் தெரிவிக்கிறார்.
சந்தீப்பும் எதுவுமே தெரியாததுபோல் ஓடுகிறார். இந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து சந்தீப்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலைக்கு சந்தீப்பின் மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாதத் தாயைக் கவனித்துக் கொள்வதில் ஏற்பட்ட சலிப்பே தாயை கொலை செய்யத் தூண்டியுள்ளது என்று அக்கம்பக்கத்தினர் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.