பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுப்பேன் என சைகையால் அச்சுறுத்திய இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரிகேடியர் பிரியங்கரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னர் அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் , அவர் முன்னிலையாகாத நிலையில், பிரிகேடியர் பிரியங்கரவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தாலும், பிரிகேடியரின் சட்டத்தரணியாலும் வழங்கப்பட்ட விளக்கங்களை அடுத்து பிடியாணை மீளப்பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று அவர் மீதான வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும், சாட்சிகளின் விசாரணைகள் இன்றி வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதிக்கு குறித்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதேவேளை, பிரித்தானிய நீதித்துறையில் அரசியல் தலையீட்டைத் தவிர்ப்போம் எனவும், குறித்த இராணுவ அதிகாரிக்கு உடனடியாக தண்டனை வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியும் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்துக்கு முன்பாக நேற்றும் புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.