புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வடக்குக்கு முதலீடுகள் அவசியம் எனில், வடக்கை தனி அரசாகப் பிரித்துத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
‘வெளிநாடுகளில் புலம்பெயர் சமூகத்தினர் செல் வச் செழிப்போடு வாழ்கின்றனர். ஆடம்பர விடுதிகள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த விடயங்களுக்காக அவர்கள் வடக்கில் முதலீடு செய்யவேண்டும். வடக்கு மக்கள் மீது அன்பும் ஆதரவும் இருந்தால் கட்டாயம் இதைச் செய்ய வேண்டும்’ என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சார்ள்ஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
‘ஏனைய மாகாணங்களில் சுற்றுலாத்துறைக்கு செலவிடப்படுவது போன்றே வடக்குக்கும் சுற்றுலாத்துறையில் நிதி செலவிடப்படவேண் டும். இதன்பொருட்டு 5 வருட வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும்’ என்றும் அவர் கூறினார்.