அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எந்தவித சதித்திட்டமும் இல்லை எனவும் தேவைப்படும் நேரத்தில் அதனை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பெல்லன்வில ராஜமகா விகாரையில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது மின்சாரம், நீர், அதிக வரி விதிப்பு போன்றவற்றால் மக்கள் சிரமப்படுவதாகவும் இதற்கு ஒருவர் இருவர் மாத்திரமல்லாது முழு அமைச்சரவையும் பொறுப்பு கூற வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவராயினும் எதிர்வரும் அனைத்து தேர்தலிலும் தாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம் எனவும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேவையான நேரம் வரும் போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதன் மூலம் அவர் மீது உள்ள பயம் வெளிப்படுவதாக சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.