பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் குறைந்த வாக்குகளை பெற்ற பிரான்கோயிஸ் பில்லான் போட்டியில் இருந்து விலகி தன்னைவிட அதிகமான வாக்குகளை பெற்ற எம்மானுவேல் மக்ரானுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடந்தது.
தற்போதைய அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டே மக்கள் செல்வாக்கை இழந்ததால் தற்போதைய இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார். பிரான்ஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 47 லட்சம் மக்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
எனவே, இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில், நேற்றைய முதல்கட்ட வாக்குப்பதிவுக்காக நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் சிற்றூர்களில் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. பிறநாடுகளில், பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தில் உள்ள பிரெஞ்சு காலனி நாடுகளிலும், புதுச்சேரி போன்ற காலனி பகுதிகளிலும், வெளி நாடுகளில் உள்ள பிரான்ஸ் தூதரகங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று ஏராளமான மக்கள் நீண்ட ‘கியூ’ வரிசையில் நின்று தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
தேர்தலை சீர்குலைப்பதாக சவால் விட்டிருந்த தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள சுமார் 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் மற்றும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு நேற்றைய தேர்தலில் மிக அதிகமான வாக்குப்பதிவு நடைபெற்றதாக பிரான்ஸ் நாளேடுகள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில், நேற்றைய முதல்கட்ட தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகளை பெற்ற வேட்பாளரான பிரான்கோயிஸ் பில்லான் போட்டியில் இருந்து விலகி தன்னைவிட அதிகமான வாக்குகளை பெற்ற எம்மானுவேல் மக்ரானுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இதையடுத்து, நேற்று பதிவான வாக்குகளில் 23.7 சதவீதம் வாக்குகளை பெற்ற வலதுசாரி தலைவரும் பெண் வேட்பாளருமான மரின் லீ பென் மற்றும் 21.7 சதவீதம் வாக்குகளை பெற்ற எம்மானுவேல் மக்ரான் ஆகியோர் வரும் மே மாதம் 7-ந் தேதி நடைபெறும் இரண்டாம்கட்ட தேர்தலில் மோதுகின்றனர்.