Tuesday , October 14 2025
Home / முக்கிய செய்திகள் / சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவராக தலைவர் பிரபாகரன் மட்டுமே இருந்தார்!

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவராக தலைவர் பிரபாகரன் மட்டுமே இருந்தார்!

பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் குறித்த அவரது அக்கறையும் ஒன்று.

உலக சூழல்தினத்துக்காகத் தங்கள் மாணவர் தினத்தையே மாற்றி அமைத்தவர் அவர். நான் அறிந்த ஆயுதப் போராட்டத் தலைமைகளில் சுற்றுச்சூழல் மீது இப்படி அக்கறை கொண்ட ஒரு தலைவராகப் பிரபாகரன் மட்டுமே இருந்தார் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (26.11.2017) சிறுப்பிட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பொஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, விடுதலைப்புலிகள் யூன் 5 ஆம் திகதி தங்களது மாணவர் அமைப்பின் ஊடாக மாணவர் தினத்தைக் கொண்டாடி வந்தார்கள். யூன் 5 ஆம் திகதி பொன்.சிவகுமாரனின் நினைவு தினம். இதனாலேயே, யூன் 5 ஆம் திகதியை மாணவர் தினமாகக் தெரிவு செய்து மிக விமரிசையாகக் கொண்டாடினார்கள்.

ஐக்கியநாடுகள் சபையால் யூன் 5 ஆம் திகதி உலக சூழல் தினமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. ஒரு தடவை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம் உலக சூழல் தினத்தைக் கொண்டாடியது. பேச்சாளராக நானும் போயிருந்தேன். அரங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தது. மேடையில் இருந்த பொருண்மிய மேம்பாட்டுக் கழகப் பிரதிநிதிகளிடம் இது தொடர்பாக நான் குறைப்பட்டுக் கொண்டபோது, அந்நிகழ்ச்சி நடைபெற்ற அதே நேரம் மாணவர் தினமும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருப்பதால் இந்நிகழ்ச்சியைச் சரியாக ஒழுங்குபண்ண முடியாமல் போனதாகத் தெரிவித்தனர். இதன் பின்னர் நான் பேசும்போது, பகிரங்கமாகவே மாணவர் தினத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் சூழல் தினத்துக்கும் கொடுக்க வேண்டும் என்று பேசினேன்.

அப்போதெல்லாம் மக்களின் கருத்தறிவதற்காகச் சந்திக்குச்சந்தி அபிப்பிராயப் பெட்டிகள் இருக்கும். அன்றிரவே தலைவர் பிரபாகரன் அவர்களுக்குச் சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவம் குறித்துக் கடிதம் ஒன்றை எழுதி அபிப்பிராயப் பெட்டியில் சேர்ப்பித்தேன். அக்காலப் பகுதியில் கிட்டு பப்பாசி மிகவும் பிரபலமாக இருந்தது. அது குறித்தும் கடிதத்தில்; எழுதியிருந்தேன். கிட்டு அவர்கள் வெளிநாட்டில் இருந்து விதைகளை எடுத்து வந்தமைக்காக அவர் பெயரைப் பப்பாசிக்குச் சூட்டுவது தவறு என்றும், அவ்வாறு சூட்டுவது அந்தப் பப்பாசி ரகத்தைக் கண்டுபிடித்தவரின் அறிவுச்சொத்துரிமையைத் திருடுவது போலாகும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். எனது கடிதத்துக்குப் பதிற்கடிதம் எதுவும் அவரிடம் இருந்து வரவில்லை.

கடிதம் வரவில்லையே தவிர, செயலால் பதில் சொல்லியிருந்தார். அடுத்த சில தினங்களில் அவர்களது பண்ணைகளில் மாட்டப்பட்டிருந்த கிட்டு பப்பாசிப் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டன. அடுத்த வருடத்திலிருந்து அவர்களது மாணவர் தினம் யூன் 5 ஆம் திகதியில் இருந்து யூன் 6 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது. கடைசிவரை யூன் 6 திகதியே மாணவர் தினத்தைக் கொண்டாடி வந்தார்கள். ஆயுதப் போராட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் வேறு எந்தத் தலைவரும் இவரைப்போல நடந்து கொண்டிருக்க மாட்டார்கள். அதனால்தான் இவர் தேசியத் தலைவராக இன்றும் எம் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவீரர்களின் பெற்றோர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டிந்தார்கள்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv