காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்தப்படுகின்றது.
இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்துள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கிலும், கிழக்கிலும் இரவு பகலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களில் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டங்கள் தொடர்பில் அரசு தொடர்ந்தும் பராமுகமாக இருப்பதால் அரசுக்குக் கடும் அழுத்தம் கொடுக்கும் வகையிலும், காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இன்று வியாழக்கிழமை தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பூரண ஹர்த்தால் போராட்டம் நடத்துவதற்கு வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் இன்று பூரண ஹர்த்தால் போராட்டம் நடைபெறுகின்றது.
அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள், போக்குவரத்துச் சங்கங்கள், வர்த்தகச் சங்கங்கள் எனப் பல்வேறு தரப்புகளும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன. இதனால் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு இன்று முற்றாக முடங்கியுள்ளது.