அரசியல் கைதிகள் விடயத்துக்கு விரைந்த தீர்வு அவசியம் என யாழ். பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம்ஓர் அறிக்கையூடாகக் கோரியுள்ளது.
இது தொடர்பாக அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:-
“இலங்கைத் தீவில் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்ட போதிலும், ஆட்சிக்குவரும் ஒவ்வொரு அரசுகளும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அசமந்த போக்கைப் பின்பற்றி வருவது நாட்டின் நல்லாட்சியையும் குறிப்பாக சட்டவாட்சியின் பொறுப்புக்கூறும் தன்மையையும் கேள்விக்கு உட்படுத்துகின்றது.
தற்போதைய சூழ்நிலையில் ஆட்சியில் உள்ள அரசு தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் தொடர்பில் அதிகளவில் பேசினாலும், அரசியல்கைதிகளின் நீதி விசாரணையில் கடும் இனவாதத்தைக் காட்டியபடி பேரினவாதப் போக்குடனேயே செயற்படுகின்றது.
கடந்த காலங்களில் நாட்டில் மாபெரும் சதிப்புரட்சிகளை இலங்கை அரசின் இறையாண்மைக்கு எதிராக செயற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியினர் பகிரங்கமான பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட வரலாறுகள் தாராளமாக உண்டு.
ஆயினும், சிறுபான்மையினராகிய இந்த அரசியல் கைதிகள் விடயத்தில் ஆட்சிக்கு வந்த அரசுகளின் போக்கு மிகவும் வேதனையானது. இது நாட்டில் பெரும்பான்மையினருக்கு ஒரு நீதி, சிறுபான்மையினருக்கு ஒரு நீதியா என்ற கேள்வியையும் இது விதைக்கின்றது.
இப்போது அரசியல் கைதிகளின் விடுதலை என்ற பதத்தைவிட, அவர்களுக்கான துரிதமான பக்கசார்பற்ற விசாரணையையே சட்டமாணவர் சங்கம் வலியுறுத்துகின்றது.
இலங்கை அரசின் இறைமையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எதிராக செயற்பட்ட அமைப்பு எனத் தடைசெய்யப்பட்ட அமைப்பாகிய தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பினுடைய 12 ஆயிரம் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்ட சூழ்நிலையில், வெறும் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட இந்த அரசியல் கைதிகளின் விசாரணையை நீதிமன்றம் ஆரம்பிப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்? எனவும் சட்ட மாணவர் சங்கம் வினா எழுப்புகின்றது.
ஆகவே, சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு மிகவும் தவறான வழியில் செயற்படும் அரசின் போக்கு சட்டத்துறை மாணவர்களாகிய எமக்குப் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் தருகின்றது.
எனவே, துரிதமான முறையில் இலங்கை அரசு அரசியல் கைதிகளின் விசாரணைகளை ஆரம்பித்து உரிய தீர்வை எவ்வித இழுத்தடிப்புமின்றி வழங்க வேண்டும். அதுவரை நியாயமான முறையில் சட்ட மாணவர் சங்கத்தின் போராட்டம் தொடரும்” – என்றுள்ளது.