மாபெரும் அரசியல் கூட்டணி மைத்திரி – ரணில் தலைமையில் ?
ஒரு மாபெரும் அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அரசியல் கூட்டணி குறித்து விவாதிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான ஒரு சந்திப்பைக் கோரியுள்ளது.
இரு கட்சிகளுக்கிடையில் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்க ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகின்றது .
அந்தவகையில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் (தான்) அடங்கலாக இந்த சந்திப்பைக் கோரியுள்ளார்.
இந்த கடிதம் தொடர்பாக அகில விராஜ் காரியவசத்திடம் வினவியபோது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் சுதந்திர கட்சியுடன் முன்னோக்கி செல்லும் வழிமுறை குறித்தே இந்த சந்திப்பு திட்டமிட்டுள்ளது என கூறினார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியுடன் இருந்து குறித்த சந்திப்பிற்கான அழைப்பு கிடைத்தமை உண்மையே என சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.