பாமக சார்பாக இன்று திண்டிவனம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வாலிபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகத்தில் அதிமுக, பாஜகவை தவிர மற்ற அனைத்து கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகம் போராட்ட களமாக மாறியுள்ளது.
சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அண்ணாசாலையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதனால், அந்த இடம் கலவர களமானது.
இந்நிலையில், இன்று காலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல், திண்டிவனத்தில் பாமகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் ரயிலின் மீது ஏறி முழக்கங்களை எழுப்பினர்.
அதில், ஒருவர் உயர் மின்சாரம் தாக்கி ஒருவர் தூக்கி வீசப்பட்டார். அவர் பெயர் ரஞ்சித் எனவும், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் மரணமடைந்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.