சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை – பி.எச். பாண்டியன்
ஜெயலலிதா மறைந்தபோது மருத்துவமனைக்கு வந்த சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை என்று பி.எச். பாண்டியன் தெரிவித்தார்.
அ.தி.மு.க. பிரமுகரும் முன்னாள் சபாநாயகருமான பி.எச். பாண்டியன் இன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் மரணம் அடைந்த டிசம்பர் 5-ம் தேதி வரையில் நடந்த நிகழ்வுகள் குறித்தும், அதன்பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் நடந்த மாற்றங்கள் குறித்து மனம் திறந்துள்ளார் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன். அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கு முன்பாக போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் வாக்குவாதம் நடந்ததாகவும், கைகலப்பின்போது அவர் கீழே தள்ளிவிடப்பட்டதாகவும் செய்தி வெளியானது. கீழே விழுந்த அவர் ‘என்னை தூக்குங்கள்’ என்று கேட்டபோது யாரும் முன்வரவில்லை என்ற தகவலும் வந்தது. வீட்டில் அவருடன் இருந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்தன.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2 மணி நேரம் கழித்து, அங்கே இருந்தவர்கள் அம்மாவுக்கு ஒன்றுமில்லை, நாளையே வீடு திரும்பி விடுவார் என்று சொன்னார்கள். அடுத்த நாளும் அப்படியே சொன்னார்கள்.
இதனால், நான் நேரடியாக மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது, உள்ளே நுழையும்போது நுழைவு வாயிலில் காவல்துறை அதிகாரிகள் 2 விதமாக உட்கார்ந்திருந்தாகள். அவர்களிடம் அனுமதி பெற்று முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ள 2வது தளத்திற்கு சென்றால், என்ன நடந்தது என்று கேட்டு தெரிந்துகொள்வதற்கு அங்கே யாரும் கிடையாது.
தொடர்ந்து அங்கே சென்றபோது, அங்கிருந்த முதலமைச்சரின் மெய்க்காப்பாளர்கள், ‘அம்மா நலமாக இருக்கிறார், நன்றாக இருக்கிறார், சீக்கிரம் வந்துவிடுவார்’ என்று சொல்ல நான் நேரடியாக வீட்டுக்கு வந்துவிட்டேன். அவரை பார்க்கவிடவில்லை.
பல நாட்கள் இப்படியே போய் வருகிறேன். டாக்டர்களின் அறைக்கு அருகில் உள்ள அதே அறையில்தான் நான் உட்கார்ந்திருப்பேன். அங்கே முன்னாள் அமைச்சர்கள் தலைமை நிர்வாகிகளும் உட்கார்ந்து, ஏதாவது செய்தி கிடைக்குமா? என்று எதிர்பார்த்தோம். எங்களுக்கு யாரும் தகவலை தெரிவிக்கவில்லை.
இப்படி பல நாட்கள் கடந்தபிறகும்கூட முதலமைச்சர் வீடு திரும்பவில்லை. என் போன்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்பினோம். ஆனால், ஒவ்வொரு நாளும் 2-வது மாடிக்கு லிப்ட்டில் சென்று நின்றவுடன், அம்மா நன்றாக இருக்கிறார், சாப்பிடுகிறார், பேசுகிறார் என்று மெய்க்காப்பாளர்கள் தாங்களாகவே முன்வந்து சொன்னார்கள். ஆனால் நிலைமை மோசமாகிவிட்டது பின்னர்தான் தெரியவந்தது.
டிசம்பர் 5-ம் தேதி அவர் மரணம் அடைந்ததாக தெரிவித்தார்கள். அப்போது, அங்கு திடீரென்னு சசிகலா மற்றும் கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட அவரது குடும்பத்தினரும் வந்தார்கள். யாருக்கும் ஒரு சொட்டு கண்ணீர்கூட வரவில்லை. இதை கண்கூடாக நான் பார்த்தேன். ஜெயலலிதாவை பார்த்துவிட்டு திரும்பி வெளியே வந்தார்கள். நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஐசியு வார்டு அருகில் உள்ள அறையில் அமர்ந்து நான் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.