சசிகலா முதல்வராவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள் – டி.ராஜேந்தர்
ஜனநாயகத்திற்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.சசிகலா முதல்வராவதை ஜெயலலிதா ஆன்மாவே ஏற்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சசிகலா மீது சிலர் வெறுப்பு கொள்ளும் நிலை இருக்கிறது என்றும், ஜனநாயகத்திற்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் லட்சிய திராவிட முற்போக்கு கழகத் தலைவர் டி. ராஜேந்தர் கூறியுள்ளார்.
உடல்நலக்குறைவினால் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து அன்று நள்ளிரவே முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம்.
டிசம்பர் மாத இறுதியில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.
நேற்று நடைபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், முதல்வராக சசிகலா பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். அந்த கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைத்தார் ஓ.பன்னீர் செல்வம். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக ஆளுநர் இன்று அறிவித்தார்.
சசிகலா முதல்வராக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது. அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் சசிகலாவிற்கு எதிராக மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர், அவசர அவசரமாக சசிகலா முதல்வராவதற்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்ற சந்தேகம் உள்ளது. வெள்ளை அறிக்கை கேட்டுள்ளனர். இதுபற்றி யாரும் பதில் சொல்லவில்லை. ஏன் கொடுக்கவில்லை என்று டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பினார்.
சசிகலா முதல்வராவதை ஜெயலலிதா ஆன்மாவே ஏற்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சசிகலா மீது சிலர் வெறுப்பு கொள்ளும் நிலை இருக்கிறது என்றும் டி.ராஜேந்தர் கூறினார். மேலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவிற்காகத்தான் மக்கள் ஓட்டு போட்டார்கள். ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக தேர்வு செய்தவர் ஜெயலலிதா. இப்போது ஓ.பன்னீர் செல்வத்தை தள்ளி விட்டு விட்டு சசிகலா அவசரமாக முதல்வராவதன் காரணம் என்ன என்றும் டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.