முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு இனிப்புக் கொடுத்த படையினரிடம் அவர்கள சரமாரியாகக் கேள்வியெழுப்பினர்.
இலங்கைப் படையினரின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேப்பாப்பிலவில்
நிலைகொண்டுள்ள படையினரால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நேற்று இனிப்பு வழங்கப்பட்டது.
இதன்போது பேராட்டக்காரரான ஆறுமுகம், படையினரிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தார். “எப்போது எங்கள் இடங்களை விடுவீர்கள்” என்றார். இதற்குப் பதிலளித்த படையினர், “மிகவும் கஷ்டப்பட்டு உங்கள் வாழ் இடங்களில் இருந்த எங்களது முகாம்களை அகற்றி வருகின்றோம். நாங்கள் மறு இடத்தில் முகாம் அமைத்து வருகின்றோம். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் படையினர் அதிகளவில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்கள்” என்றனர்.
“எங்கள் வாழ்விடங்கள் அனைத்தையும் விடுவிப்பீர்களா?” என அவர் மீண்டும் படையினரைக் கேட்டார். இதற்குப் பதிலளித்த படையினர் “கேப்பாப்பிலவுப் பாடசாலை படையினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும், உங்களுக்கான மாற்றுப் பாடசாலை மாதிரிக் கிராமத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் கோரியுள்ள 111 ஏக்கர் நிலப்பரப்பைத்தான் முதற்கட்டமாக விடுவதற்கு நாங்கள் முயற்சி எடுத்து வருகின்றோம்” என்றனர்.
படையினருடைய இந்தப் பதில் போராடும் மக்களிடத்தில் விசனத்தை ஏற்படுத்தியது.