தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 25 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெறுகிறது. விசாரணைக் காவல் முடிந்ததும் மீனவர்களை விடுதலை செய்கின்றனர். ஆனால், படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டனர். இதன்மூலம் இலங்கை சிறைகளில் மொத்தம் 25 மீனவர்கள் உள்ளனர். 119 படகுகளும் இலங்கை வசம் உள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், இலங்கை சிறைகளில் உள்ள 25 மீனவர்கள் மற்றும் 119 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
நமது மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் நீரிணை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து மீறுவதாக கூறியுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இலங்கை அரசு 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு தமிழக மீனவர்களின் படகுகள் எதையும் விடுவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
‘படகுகளை விடுவிப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக, கொழும்பில் கடந்த ஜனவரி 2-ம் தேதி நடைபெற்ற அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், படகுகளை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இலங்கை சிறைகளில் உள்ள 25 மீனவர்கள் மற்றும் 119 படகுகளையும் தாமதமின்றி விடுவிக்க தேவையான நடவடிக்கையை இலங்கை அரசுடன் பேசி மேற்கொள்ளும்படி, வெளியுறவுத் துறைக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும்.’ என முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.