கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார்
சசிகலாவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் சென்றனர்.
சொத்து குவிப்பு வழக்கு சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கான 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. அவர்களை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க முடியாது.
எனவே, எம்.எல்.ஏ.க்களுடன் கூவத்தூர் விடுதியில் தங்கியிருந்த சசிகலா, மாற்று ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார். தீர்ப்பு வெளியானதும் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனையடுத்து, பல எம்.எல்.ஏ.க்கள் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த சட்டமன்ற கட்சி தலைவரை தேர்வு செய்வது குறித்து அங்கிருந்த எம்.எல்.ஏ.க்களுடன் சசிகலா அவசர ஆலோசனை நடத்தினார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையின் முடிவில் சட்டமன்ற கட்சி தலைவராக அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அத்துடன், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டிருக்கிறார்.
இதையடுத்து, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கட்சியின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் என்றும், அனைவரும் எந்த இடையூறும் இல்லாமல் வேறுபாடுகளை மறந்து வழக்கமான பணிகளை தொடரலாம் என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குழுவினர் அனைவரும் கூவத்தூர் புறப்பட்டுச் சென்றனர். அங்கு, இருக்கும் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஒற்றுமையாக அனைவரும் செயல்பட்டு, அ.தி.மு.க. ஆட்சியை எந்த இடையூறும் இல்லாமல் நான்காண்டு காலம் வெற்றிகரமாக நடத்தும்படி கேட்டுக்கொள்வார்கள்.
இந்த சந்திப்பின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. சசிகலா பக்கம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் சிலர் வெளியேறும் பட்சத்தில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும்.