“எமது பிள்ளைகள் உயிரோடு உள்ளதாக இராணுவப் புலானாய்வாளர்கள் தெரியப்படுத்தியபோதும் ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இதுவரை எமது பிள்ளைகள் விடுவிக்கப்படவில்லை. படையினரிடம் உயிருடன் ஒப்படைத்த எமது பிள்ளைகள் மாத்திரமே எமக்கு வேண்டும்.”
– இவ்வாறு கதறி அழுகின்றனர் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளே இவ்வாறு கதறி அழுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 47ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
மாவட்ட செயலகத்துக்கு முன்பாகக் கூடாரம் அமைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுகின்றது.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 59ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதிலளிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி கிளிநொச்சியில் 63ஆவது நாளாகவும், யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் 40ஆவது நாளாகவும், திருகோணமலையில் 50ஆவது நாளாகவும் இன்று போராட்டங்கள் தொடர்கின்றன.