சென்னை கடலோரப் பகுதியிலிருந்து 65 டன் எண்ணெய் கசிவு அகற்றம் – மத்திய அரசு
சென்னை கடலோரப் பகுதியிலிருந்து இதுவரை 65 டன் எண்ணெய் கசிவு அகற்றப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 28-ம் தேதி சென்னை காமராஜர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கடலில் கச்சா எண்ணெய் கசிந்தது. இந்நிலையில், சென்னை கடலோரப் பகுதியிலிருந்து இதுவரை 65 டன் அதாவது 90% எண்ணெய் கசிவு அகற்றப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் தூய்மைப் பணி முற்றிலுமாக நிறைவு பெறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் கசிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படுத்துவது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) பல்வேறு வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளதாகவும் மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
அரசு அறிக்கை விவரம்:
பிப்ரவரி 2-ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி சென்னை கடல் பகுதியிலிருந்து 65 டன் எண்ணெய்க் கசிவு அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது. 90% கழிவுகள் அகற்றப்பட்டுவிட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் தூய்மைப் பணி நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவின் அளவுக்கும் கசிவான கச்சா எண்ணெய்யின் அளவுக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. காரணம், கச்சா எண்ணெய் தண்ணீருடன் கலக்கும்போதும், மணலுடன் கலப்பதாலும் அதன் தண்மை மாறுகிறது. எண்ணெயும், தண்ணீரும் சேரும் போது அந்தக் கழிவுகள் கொஞ்சம் புடைத்ததுபோல் ஆகிவிடுகின்றன. இதனால் அப்புறப்படுத்தும் எடையளவு அதிகரிக்கிறது. உதாரணத்துக்கு குறிப்பிட வேண்டும் என்றால் சூப்பர் சக்கர்ஸ் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட 54 டன் கழிவுகளில் 70% தண்ணீர் இருந்தது.
கடலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் கசிவுகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படுத்துவது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) பல்வேறு வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது. ஐஓசி ஆராய்ச்சி துறையின் நிபுணர்கள் உதவியுடன் சேகரிக்கப்பட்ட கழிவுகளை 2000 சதுர மீ அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ள ஆழ் குழியில் புதைத்து அப்புறப்படுத்த ஆயதப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடலில் எண்ணெய்க் கசிவு தென்பட்ட உடனேயே கடலோர காவல் படை தூய்மைப் பணிகளை தொடங்கிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காசிமேடு – எர்னாவூர் துறைமுகம் பகுதியில் தமிழக அரசு மற்றும் காமராஜர் துறைமுகம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.