மெரீனாவில் 144 தடை உத்தரவு மீறி சசிகலா, முதல்வர் ஒ.பி.எஸ். அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி
மெரீனா கடற்கரையில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஒபிஎஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் அண்ணா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா, ஒ.பன்னீர் செல்வம், தம்பித்துரை உள்ளிட்ட அதிமுகவினர் ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் இன்று அஞ்சலி செலுத்தினர். அண்ணாவின் 48வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வர் ஒபிஎஸ் கட்சி நிர்வாகிகள், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சுற்றி வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மண்டியிட்டு குனிந்து விழுந்து கும்பிட்டார். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கும் சென்று அஞ்சலி செலுத்தினார் சசிகலா.
மெரீனா கடற்கரைக்கு கூட்டமாக செல்லவும், பேரணி செல்லவும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுக நிர்வாகிகள் கூட்டமாக சென்று நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.