“தமிழ் மக்களில் சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கே என்று அவர்களின் உறவுகள் கதறுகின்றார்கள். எனவே, இந்த உறவுகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்கவேண்டும். அதேவேளை, பொதுமக்களைக் காரணமின்றிக் கொன்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை அவசியம்.”
– இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா, யாழ்ப்பாணத்துக்கு விஐயம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்குபட்பட்ட வீமன்காமம் பகுதியில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அடிக்கல்லை நாட்டி வைத்தார். அதன்பின்னர், வலிகாமம் வடக்கு மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“காணாமல்போனவர்களின் விடயம் தொடர்பாக அவர்களின் உறவுகள் நாளாந்தம் எனது செயலணிக்கு வந்து அழுது புலம்பிச் செல்கின்றனர். இது தொடர்பாக நேர்மையான நடவடிக்கையை எடுப்பதாக அரசு மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் வாக்குறுதி அளித்துள்ளது. அதன் காரணமாக பாதுகாப்புத் தரப்புடனும் பொலிஸாருடனும் கலந்துரையாடி ஒரு செயல் திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளோம். அதன் முதலாவது பணியாக யார் காணாமல்போனது? காணமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? தொடர்பாக ஒரு பட்டியலைத் தயாரிப்பது. அதற்குத் தேவையான சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்து அந்தச் சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்தச் சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு அதனை நடைமுறைப்படுத்தும் பணி மட்டுமே மிகுதியாகக் காணப்படுகின்றது. இந்த விடயம் இலகுவான விடயமாக அமைந்திருக்கவில்லை.அதற்கு முக்கிய காரணம் வரலாற்றில் எங்கும் இல்லாதவாறு முன்னாள் ஜானாதிபதி மஹிந்த நாட்டில் உள்ள இன, மத ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார். அவர் மக்கள் மத்தியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டிவருகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இருந்த 40 பேர் தற்போதும் நாடாளுமன்றில் அங்கம் வகித்து வருகின்றனர். அவ்வாறான சவால் இருந்தபோதிலும் நாம் காணாமல்போனவர்கள் தொடர்பான இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றினோம். எனவே, இன்னும் சில அற்பமான விடயங்கள் மட்டுமே செய்யவேண்டிய தேவைகள் உள்ளன.
இந்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக இலங்கையில் உள்ள எல்லா இராணுவத்தையும தூக்குமேடைக்குக் கூட்டிச் செல்வதாக அர்த்தமில்லை. பொதுமக்கள், தங்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்; அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டுபிடித்துச் சொல்லுமாறே கேட்கின்றனர். மாறாக, இராணுவத்தைத் தூக்குமேடைக்கு அனுப்புவது தொடர்பில் அவர்கள் கருத்துக்களைக் கூறுவதில்லை.
போர் இல்லாமல் பொதுமக்களைக் காரணமின்றி கொன்றவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை நிச்சயமாக எடுக்கவேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை அவசியம். ஆனால், இந்த நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடிய எமது இராணுவ வீரர்களுக்கு எதிராக செயற்படுவதற்கு நாம் தயாராக இல்லை.
காணமல்போனவர்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்டஈடுகளை வழங்குவதற்கான வேலைகளையும் செய்து வருகின்றோம்.
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு இன்றுவரை வழங்கப்படவில்லை. இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் இரண்டு பிரதான கட்சிகளே காணப்படுகின்றன. அதில் ஒரு கட்சி பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படும்போது மற்றைய கட்சி குழப்புகின்ற நிலைமை காணப்பட்டது. இதனால்தான் சில தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களுக்கென ஒரு தனிநாட்டைத் தருமாறு கோரி அதற்காகப் போராடி பெரும் அழிவை ஏற்படுத்தும் போர் நிலைமையும் ஏற்பட்டது. தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. இரு பிரதான கட்சிகளும் இணைந்துள்ளன. அரச யாப்புதான் நாட்டின் உன்னதமான சட்டம். சகல மக்களுக்கும் சம உரிமைகளை வழங்கவேண்டும் என்பதனை ஏற்கின்றோம். அதனை வழங்காவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது.
வடக்கு மக்கள் நீண்டகாலமாக ஒதுக்கப்பட்டு ஒதுங்கியே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றன. எனவே, அனைத்து மக்களும் ஒன்றாக வாழவேண்டும். அதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும்” – என்றார்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.