எந்த சட்ட திட்டத்துக்கும் கட்டுப்படாமல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபட்டு அடாவடி செய்து வருகிறது.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் அணு ஆயுதங்களை சோதித்து வருகிற அந்த நாடு, உலக நாடுகளை அதிர வைத்து வருகிறது.
இந்த நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனையை நேற்று மீண்டும் நடத்தியது. தனது கடல் பகுதியில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியது என ஜப்பான் நாட்டு அதிபர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.
வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியது உண்மைதான் என வாஷிங்டனில் உள்ள பென்டகனும் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில், வடகொரியா நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம்.
இந்த நிலைமையை நாங்கள் எதிர்கொள்வோம். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாகவே வடகொரியாவை நாங்கள் பார்த்து வருகிறோம். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என ஷின்ஷோ அபே தெரிவித்துள்ளார். தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.