வடக்கு அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராஜாவை பதவியிலிருந்து நீக்குங்கள்! – பரிந்துரைத்தது விசாரணைக் குழு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையில் இரு அமைச்சர்கள் உடன் பதவி விலகவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா ஆகியோரையே பதவி விலகவேண்டும் என்று அந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர். அவர்கள் மீது ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் சொந்தக் கட்சியினராலேயே முன்வைக்கப்பட்டு வந்தன. அது தீவிரம் பெற்று விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுயாதீனமான குழுவொன்றை நியமிக்கிறார் என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலர் செ.பத்மநாதன் ஆகியோர் அந்த விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தக் குழு கடந்த வருடம் நவம்பர் மாதம் தனது பணியை ஆரம்பித்தது. அதன் இறுதி அறிக்கை கடந்த மே மாதம் 19ஆம் திகதி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கை 82 பக்கங்களைக் கொண்டுள்ளது. முழுமையாகத் தமிழ்மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணை, விதிமுறை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள், கண்டறிவுகள், பரிந்துரைகள் அல்லது விதப்புரைகள், நன்றியுரை என்ற கட்டமைப்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கண்டறிவுகள், பரிந்துரைகள் பகுதியில் அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
(அ) சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதனால் அவர் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றார்.
(ஆ) போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தியவர்கள், விசாரணைக்கு சமுகமளிக்கவில்லை. எனினும், குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டன. ஆதாரங்கள் இல்லாததால் அவரும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றார்.
(இ) கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கல்விச் சேவைப் பின்புலத்திலிருந்து வந்தவர். வடக்கின் கல்வி வீழ்ச்சியடைந்திருந்தது. இவ்வாறான சூழலில் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதன் பின்னரும் கல்விப் புலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அமைச்சர் குருகுலராஜா அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சின் செயலாளரின் அதிகாரத்தை அமைச்சர் தனது கையில் எடுத்துள்ளார். இடமாற்றங்களின்போது அரசியல் செல்வாக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை முறையற்ற விதத்தில் அமைச்சர் பயன்படுத்த வகை செய்யும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இதில் செயலாளரும் கையெழுத்திட்டு உடந்தையாக இருந்திருக்கின்றார். இப்படியானதொரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டபோது பிரதம செயலாளரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்துள்ளார்.
வடக்கு மாகாண சபை திறனற்றுச் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டு மக்களால் முன்வைக்கப்பட்டு வருவதை ஆமோதிப்பதுபோன்று இது உள்ளது.
மிக முக்கியமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைச் சிறுமி ஒருவர் பாடசாலை அதிபரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். சம்பவம் குறித்துக் குரல் எழுப்பிய பாடசாலை ஆசிரியரை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருடன் இணைந்து கல்வி அமைச்சர் இடமாற்றம் செய்துள்ளார். இது மிக மோசமான மன்னிக்க முடியாத குற்றம்.
எனவே, கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உடனடியாகத் தனது அமைச்சுப் பதவியிலிருந்து உடன் விலகவேண்டும். அத்துடன், கல்வி அமைச்சின் செயலாளரும் அந்தப் பதவியிலிருந்து விலகவேண்டும்.
(ஈ) விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆளும் கட்சி உறுப்பினரான ஜி.ரி.லிங்கநாதன், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா ஆகியோர் விசாரணைக் குழுவிடம் முன்னிலையாகியிருந்தனர். அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் தவராசா குறுக்கு விசாரணை செய்திருந்தார். அதிகார வரம்பு மீறல், முறைகேடுகள், நிதி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் இருக்கின்ற நிலையில், இளையவரான ம.பற்றிக்டிறைஞ்சன் இவரது அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டார். இது இவர் செய்கின்ற மோசடியான நடவடிக்கைகளுக்கு இணங்கிச் செயற்படுவதற்காகவே மேற்கொள்ளப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மரம் நடுகை, பாதீனிய ஒழிப்பு, நீர் ஆய்வு விடயங்களை சுற்றாடல் அமைச்சர் என்ற கோதாவில் முன்னெடுத்துள்ளார். சுற்றுச்சூழல் விடயம், 13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் ஒருங்கிணைவு நிரலில் உள்ளது. இவற்றை மத்திய அரசுடன் சேர்ந்து திணைக்களம் உருவாக்கி மேற்கொண்டிருக்கவேண்டும். அப்படியல்லாமல் அமைச்சரை முன்னிலைப்படுத்தியே இவரது செயற்றிட்டங்கள் அமைந்துள்ளன.
இத்தகைய செயற்றிட்டங்களின் தொடக்க நிகழ்வுகளுக்கு முதலமைச்சர் அழைக்கப்பட்டிருக்கின்றார். அவரே இவற்றை இயக்குவதான பின்னணியில் இருப்பதான மாயை ஏற்படுத்தும் நோக்கில் செயற்பட்டுள்ளார். அதனை வைத்து தனது கைங்கரியங்களை நிறைவேற்றியுள்ளார்.
இவரது அமைச்சுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பவுசர்களை உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
விவசாயக் கிணறு புனரமைப்பு, புழுதியாற்று நீர்ப்பாசனத் திட்டங்களில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன.
வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளராகக் கடமையாற்றிய திருமதி மதுமதி வசந்தகுமார், இவரது அழுத்தங்கள் காரணமாகவே மாகாண சபை சேவையை விட்டு வெளியேறினார் என்று விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.
வடமராட்சி கிழக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவரை பதவி நீக்கம் செய்தமை உள்ளிட்ட விடயங்களில் அமைச்சர் நேரடியாக தலையீடு செய்து அழுத்தங்களை வழங்கியுள்ளார்.
இதேபோன்று யாழ்கோவிலும் தலையீடு செய்துள்ளார். இதனால் விசாரணைக்குழு விசனமடைகின்றது. பிந்திய செய்தியாக, யாழ்கோ பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமனத்திலும் அழுத்தம் கொடுத்துள்ளார் என்று அறிகின்றோம்.
திணைக்கள அதிகாரிகள் மிரட்டப்பட்டு சில நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவர் முன்னெடுத்த தன்னை முதன்மைப்படுத்திய செயற்றிட்டங்களால் மாகாண சபை நிதி வீண்விரயம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், அவரது செயலாளருமான பற்றிக்டிறைஞ்சன் ஆகியோர் உடன் பதவி விலகவேண்டும்.
வடக்கு மாகாண சபையை வினைத்திறனாகக் கொண்டுநடத்துவதற்கு எமது பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன், ச.சுகிர்தன் இருவரும் விசாரணைக் குழுவின் முன்பாக ஒரு தடவைகூட முன்னிலையாகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.