Friday , August 29 2025
Home / முக்கிய செய்திகள் / இயற்கைப் பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு! 111 பேர் மாயம்!! 2,035 வீடுகள் சேதம்!!! – தொடர்கிறது மீட்புப்பணி

இயற்கைப் பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு! 111 பேர் மாயம்!! 2,035 வீடுகள் சேதம்!!! – தொடர்கிறது மீட்புப்பணி

நாட்டின் தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொட்டிய கடும் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி மரணமானோரின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இறுதியாக வெளியிட்ட அறிக்கையில், 111 பேர் காணாமல்போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தங்களில் 95 பேர் காயமடைந்துள்ளனர். 24 ஆயிரத்து 735 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 218 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் 319 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளமாக இது கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் 2003ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளத்தில் 236 பேர் பலியாகியிருந்தனர்.

தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இராணுவத்தின் 15 பற்றாலியன்களைச் சேர்ந்த 1,500 படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்படை, 86 படகுகளுடன் 500 பேர் கொண்ட சிறப்புப் பயிற்சிபெற்ற 86 மீட்புக் குழுக்களைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

விமானப்படை, 6 ஹெலிகள் மற்றும் ஒரு கண்காணிப்பு விமானம் என்பனவற்றை மீட்புப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 35 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv