மக்கள் புரட்சியால் பதவி இழந்த எகிப்து முன்னாள் அதிபர் முபாரக் விடுதலை
மக்கள் புரட்சியால் பதவி இழந்த எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் விடுதலை செய்யப்பட்டார்.
எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் (88). சர்வாதிகாரியான இவர் கடந்த 29 ஆண்டுகளாக ஆட்சி நடத்தினார். அவரது குடும்ப ஆட்சிக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் புரட்சி நடந்தது.
புரட்சியை ஒடுக்க முபாரக் ராணுவ நடவடிக்கை எடுத்தார். அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் மக்கள் புரட்சி கடும் தீவிரம் அடைந்தது. அதை தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
பின்னர் கைது செய்யப்பட்ட அவர் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
அதை எதிர்த்து மேல் கோர்ட்டில் அவர் அப்பீல் செய்தார். அதில் தனது உடல் நிலை மற்றும் வயோதிக தன்மையை கருத்தில் கொண்டு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்.
அதை பரிசீலித்த கோர்ட்டு கடந்த 3-ந்தேதி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே அவர் கடந்த 6 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து இருப்பதாகவும், அந்த தண்டனையே போதுமானது என்றும் கூறப்பட்டுள்ளது.