ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும் இரு பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியினரால் இவ்விரு பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டு பின்னர் அவ்விடயம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இரு பிரேரணைகளும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்படவுள்ளதாகவும் ஐ.தே.க.வில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கமாட்டோமென மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.