ரிதிதென்னவில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமொன்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமொன்று நேற்று காத்தான்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று ரிதிதென்ன பகுதியில் இன்னொரு பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேசசபைக்குட்பட்ட இந்த பயிற்சி முகாம் 40 ஏக்கரிற்கும் அதிக விஸ்தீரணமுடையது. இந்த காணி உரிமையாளர், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே, இன்று அங்கு தேடுதல் நடத்தப்பட்டது.
தேடுதலின்போது வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
ஐ.எஸ்.இன் ஆயுத உற்பத்தி பகுதி ஓமடியாமடுவில் கண்டுபிடிப்பு!
மட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம் தொடர்பான அதிர்ச்சிதரும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு – பொலனறுவைவை எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஓமடியாமடுவில் இந்த முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சஹரானின் முக்கிய சாரதியான கபூர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த பிரதேசத்திற்கு இன்று சென்ற இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தற்போது குறித்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.
மகாவலி திட்டத்திற்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலப்பரப்பை வேறு ஒருவரின் பெயரில் குத்தகைக்கு வாங்கி பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
காட்டுப்பகுதியில் அமைந்துள்ள குறித்த நிலத்தில் வீடொன்றும் காணப்படுகிறது. அங்கிருந்தே தாக்குதல்களுக்கான திட்டம் மற்றும் ஆயுத உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டன என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அத்தோடு, நிலக்கீழ் முகாமொன்றை அமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது நிலத்தை தோண்டும் நடவடிக்கைகளை இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.