மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மீனாட்சியம்மன் கோவிலை நிர்வகிக்க, மாநில அளவிலான குழுவை அமைப்பதுடன், தீ விபத்தின் போது அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோவிலில் முறையான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை என குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்தை தொடர்ந்து கோவிலின் ஸ்திரத்தன்மையை குழு ஆய்வு நடத்தி வருவதுடன், முறையான பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்ட அனுமதி எவ்வாறு கொடுக்கப்பட்டது? பணம் உள்ளவர்களுக்கு சட்டம் பொருந்தாதா? என கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தவிர செல்போன்களை கொண்டு செல்ல தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், கோவிலுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க, மாநில அரசு மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தினர். கோவிலுக்குள் உயர் தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும், சட்டப்படி புராதன கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் உள்ள கட்டடங்கள் இருக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர், அதனால், மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள கடைகளை ஆய்வு செய்து சட்டப்படி அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.