Wednesday , October 15 2025
Home / முக்கிய செய்திகள் / ம.தி.மு.க. முடிவை தி.மு.க. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது மு.க.ஸ்டாலின் பேட்டி

ம.தி.மு.க. முடிவை தி.மு.க. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது மு.க.ஸ்டாலின் பேட்டி

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் 300–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், தையல் எந்திரங்கள், ஆடைகள் என நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டும். இந்த ‘குதிரை பேர’ ஆட்சிக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற உணர்வுடன் பல கட்சிகள் இன்றைக்கு தி.மு.க.வுக்கு ஆதரவு தந்து வருகின்றன.

எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்தால் தான் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள ஆபத்தை நீக்க முடியும் என்ற எண்ணத்துடன் தி.மு.க.வுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. உயர்நிலைக் கூட்டத்தில் எடுத்திருக்கும் முடிவை அவர் தனது பேட்டியில் தெளிவாக சொல்லியிருக்கிறார். அதனை தி.மு.க.வின் சார்பில் நான் வரவேற்கிறேன்.

இப்போது இணைந்திருப்பதற்கான காரணத்தை அவர் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். அதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன். இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எல்லா கட்சிகளும் ஒருங்கிணையும் இந்த நேரத்தில் ம.தி.மு.க.வும் அதில் தனது பங்கை செலுத்தும் வகையில் இணைந்திருப்பது, உள்ளபடியே பாராட்டுக்குரியது. அதனை வரவேற்று மகிழ்ச்சியடைகிறேன்.

கன்னியாகுமரி மாவட்டம் முழுதாக பாதிக்கக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டும் அதுபற்றி கவலைப்படாமல் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆடம்பரமான கட்–அவுட்கள், பேனர்கள் வைத்து, மக்களுடைய வரிப்பணத்தை பாழடிக்கும் வகையில் விழா எடுத்துக் கொண்டிருக்கிறார்.

உடனடியாக விழாக்களை எல்லாம் ரத்து செய்துவிட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் நாளை (இன்று) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு செல்கிறேன். அங்குள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களை சந்திக்கவிருக்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

இடைத்தேர்தலுக்கு அமைந்துள்ள கூட்டணி சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வரை தொடருமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு இன்றைக்கு ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக அவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலின்போது அந்த தேர்தலுக்கான கூட்டணி பற்றி பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv