ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுதலை – டில்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்றம்
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களை விடுதலை செய்து டில்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவைரையும் விடுதலை செய்வதாக நீதிபதி ஓ.பி.சைனி இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.
சி பி ஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் தொடுத்த இந்த வழக்கில், முன்னாள் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் , சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் பிறர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
தமிழ்நாட்டை வம்சாவளியாகக் கொண்ட வெளிநாட்டு வாழ் இந்தியரான, சிவசங்கரன் என்ற தொழிலதிபரிடம் இருந்த ஏர்செல் கைபேசி நிறுவனத்தில் அவரது பங்குகளை, மலேசிய நிறுவனமான மேக்ஸிஸுக்கு விற்க தயாநிதி மாறன் வற்புறுத்தினார் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் கூறியிருந்தது.
அதற்கு பிரதிபலனாக, மேக்ஸிஸ் நிறுவனம் சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில் முதலீடு செய்தது என்பது குற்றச்சாட்டாக இருந்தது.