இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படுமா? மங்கள சமரவீர
இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க பொறிமுறைகள் மற்றும் அதில் காணப்படும் தடைகள், முட்டுக்கட்டைகள் என்பன தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனிடம் விளக்கிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் முன்னேற்ற காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜெனிவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர், மனித உரிமை ஆணையாளரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கம் முன்னெடுத்துவரும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாகவும், அதன் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் அமைச்சர் ஆணையாளரிடம் விளக்கியுள்ளார். இந்நிலையில், நல்லிணக்க செயற்பாடுகளில் மேலும் முன்னேற்றத்தை வெளிப்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ஆணையாளருடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வின் போது உலக நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்த வெளிவிவகார அமைச்சர், காலஅவகாசம் கோரும் விடயம் தொடர்பில் அவர்களிடம் எடுத்துரைத்துள்ள நிலையில், பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.