“புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடைக்கால வரைபின் அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, காலத்தை இழுத்தடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுங்கள்.”
– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் இடித்துரைத்தார் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
கொழும்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு நடைபெற்ற முக்கிய சந்திப்பின்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை தொடர்பில் பேசுவதற்காக நேரம் ஒதுக்கித்தருமாறு ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு கேட்டு பல நாட்களாகிவிட்டபோதும், ஜனாதிபதியைச் சந்திக்க நேற்றிரவு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கூட்டமைப்பின் நிலைப்பாட்டை அதன் தலைவர் இரா.சம்பந்தன் இறுக்கமாக இடித்துரைத்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு முக்கிய கட்சிகளினதும் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோர் அமர்ந்திருக்கும்போதே ஜனாதிபதியிடம் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் எடுத்துரைத்துள்ளனர்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் அழைத்து இந்தக் கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டபோதும் அரசமைப்பு உருவாக்கப் பணியை விரைந்து முடிப்பதற்கு இடையூறாக உள்ள சகல முட்டுக்கட்டைகளையும் நீக்குவது தொடர்பிலும் நேற்றைய பேச்சில் ஆராயப்பட்டது.
20ஆவது திருத்தச் சட்டவரைபு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசுவதற்கு கடந்த வியாழக்கிழமை திட்டமிட்டிருந்தார். இறுதிநேரத்தில் அந்தச் சந்திப்பு நிறுத்தப்பட்டது. நேற்றிரவு அந்தச் சந்திப்பு நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர், அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியினர், அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அந்தக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடைக்கால வரைபின் அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படாமல் இழுத்தடிப்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது கடுமையான நிலைப்பாடுகளை நேற்றைய சந்திப்பில் இடித்துரைத்தார்.
இதன் பின்னர் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த மாத (செப்டெம்பர் மாதம்) முற்பகுதியில் புதிய அரசமைப்புக்கான இடைக்கால வரைபின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
அதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைபு மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் தொடர்பில் நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்ட கட்சிகள் தத்தமது நிலைப்பாடுகளை முன்வைத்த போதிலும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.