கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகராக கடந்த மாத இறுதியில் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் பொறுப்பேற்றிருந்தார். முதலில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசிய அவர், அடுத்த கட்டமாக வடக்கிலுள்ள படைத்தளங்களுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
கடந்த 30ஆம் நாள் கிளிநொச்சி படைகளின் தலைமையகத்துக்கு சென்று, அதன் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அஜித் காரியக்கரவணவுடன் கலந்துரையாடினார்.
கிளிநொச்சியின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்த அவர், அடுத்து கடந்த 31ம் நாள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு யாழ். படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாகவும், அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர், கேட்டறிந்து கொண்டார்.
அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா இராணுவத்தின் அனைத்து பிராந்திய படைத் தளபதிகளைச் சந்திக்கவுள்ளார். அத்துடன் ரெஜிமென்ட் தலைமையகங்களுக்கும் செல்லவுள்ளார்.