ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று சகல சவால்களையம் தாண்டி வந்துள்ளது. எனவே, இன்றிலிருந்து சு.க. வெற்றிப் பாதையிலேயே செல்லும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
“இலங்கையை இரு தாசாப்தங்களுக்கும் அதிகமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் ஆட்சி செய்ததைப் போன்று எதிர்வரும் காலங்களிலும் சு.கவின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இன்று கொழும்பு – சுகததாச உள்ளக அரங்கில் இன்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தது. கட்சியை ஸ்தாபித்த பண்டாரநாயக்க இது போன்ற சவால்களுக்கு முகம் கொடுத்து இறுதியில் உயிரிழந்தார்.
அதேபோன்று அதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவடைந்து கட்சித் தலைமையகம் கூட எம் கைவசம் இருக்கவில்லை. ஆனால், இன்று அவை அனைத்தையும் வெற்றிகரமாக முறியடித்து பலமான ஒரு கட்சியாக சு.க. உருவாகியுள்ளது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” – என்றார்.