நிதிச் சுத்திகரிப்பு சட்டமூலத்தினூடாக மட்டக்களப்பு பல்கலைக்கழக தனியார் நிறுவனத்துக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கென கைமாற்றப்பட்டுள்ள நிதி தொடர்பில் பரந்துபட்ட விசாரணைகள் அவசியமானதாகும். முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் என்பதற்காக அவரைப் பாதுகாக்க முயற்சிப்பது நியாயமற்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்தார்.
நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேலும் கூறியதாவது,
மட்டக்களப்பு கெம்பஸ் தனியார் நிறுவனம் சட்டத்துக்கு முரணானதாகும். நிதி சுத்திகரிப்பு சட்டமூலத்தினூடாக இந்த நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இன்று அது உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது.
ஆகவே இந்த தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணைகள் முறையாக இடம்பெற்றனவா என்ற பிரச்சினையும் எமக்குள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகளுக்கென வெளிநாட்டிலிருந்து 3 பில்லியன் ரூபா நிதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடு சென்று தொழில்புரியும் தொழிலாளி சேகரித்த பணத்தை இங்கு அனுப்பும் போது, அந்த பணம் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கையில் இந்த நிறுவனத்துக்கு என பரிமாற்றப்பட்டுள்ள நிதி தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டிருக்க வேண்டும். எதற்காக இந்தப் பணம் இங்கு வந்தது, எவ்வாறு திரட்டப்பட்டது, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து முக்கிய அவதானம் செலுத்தியிருக்க வேண்டும்.
அந்த விசாரணைகளின் அறிக்கை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். குற்றப்புலனாய்வுப் பிரிவு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறைகள் முறையாக இடம்பெற்றனவா என்பதில் எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு அமைச்சு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பிலேயே உள்ளது. எனவே மட்டக்களப்பு கெம்பஸ் தனியார் நிறுவனம் தொடர்பில் பரந்துபட்ட விசாரணைகளை முன்னெடுப்பது அவசியமாகும். ஜனாதி பதி இது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஹிஸ்புல்லா ஸ்ரீல ங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் என்ப தற்காக அவரை பாதுகாக்க முயற்சிப்பது நியாயமற்றதாகும்.