ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கிய இணை அணுசரனையிலிருந்து விலகிக்கொள்வது குறித்து இலங்கை ஆராய்ந்துவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை உறுதி செய்துள்ளார்.
நாங்கள் இதிலிருந்து விலகிக்கொள்ளலாம் என எதிர்பார்க்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெறுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள அமர்வுகளிற்கு நாங்கள் தயாராகிவருகின்றோம்,நாங்கள் சில முன்னேற்றங்களை காண்பித்துள்ளோம், என தெரிவித்துள்ள சிறிசேன எங்கள் படையினர் யுத்த குற்றங்களில் ஈடுபடவில்லை, விடுதலைப்புலிகளே மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டனர்,ஜெனீவா அமர்வில் இது குறித்து தெளிவாக எடுத்துரைப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகுவதால் ஏற்படக்கூடிய நன்மை தீமை குறித்து ஜனாதிபதியுடன் சேர்ந்து ஆராய்ந்து வருகின்றோம் என வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகிக்கொள்ள தீர்மானித்தால் 2015 செப்டம்பர் 20 திகதி இலங்கை கடைப்பிடித்த உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிலிருந்து பாரிய மாற்றமாக அமையும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.