Friday , November 22 2024
Home / முக்கிய செய்திகள் / அரசமைப்பு தயாரிப்பு குறித்து இரண்டு வாரங்களில் மைத்திரி விசேட அறிவிப்பு!

அரசமைப்பு தயாரிப்பு குறித்து இரண்டு வாரங்களில் மைத்திரி விசேட அறிவிப்பு!

அரசமைப்பு தயாரிப்புப் பணி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

இன்னும் இரண்டு வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகலாம். இதன்போது அரசமைப்பு பற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாட்டையும் கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவர் விளக்குவார் என்று அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட்டு அது தொடர்பில் மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அமுல்படுத்தப்படவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றது. பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் இதுவாகத்தான் இருக்கின்றது.

எனினும், புதிய அரசமைப்பு அவசியமில்லை. அதில் திருத்தங்களைச் செய்தாலேயே போதுமானதாக அமையும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடித்துரைத்து வருகின்றது. புதிய அரசமைப்புக்கு மஹிந்த அணியும் போர்க்கொடி தூக்கியுள்ளது.

இதனால், அரசமைப்பு சபையின் வழிநடத்தும் குழுவினாலும் இன்னும் இறுதிமுடிவொன்றை எட்டமுடியாமல் இருக்கின்றது. ஏப்ரல் மாதம் இடைக்கால அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் இணக்கப்பாடு எட்டப்படாததால் அது வெளிவருவதில் இழுபறிநிலை தொடர்கின்றது. இந்நிலையில், அரசமைப்பு தயாரிப்புப் பணியை தீவிரப்படுத்தும் முயற்சியில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சர்வதேச வெசாக் தின நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் பிரதான அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றுடன் இது சம்பந்தமாக ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார். அதன்பின்னரே குறித்த விசேட அறிவிப்பை அவர் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவாகிய பின்னர் முக்கிய விடயங்கள் சம்பந்தமாக விசேட அறிவிப்புகளை தொலைக்காட்சி ஊடாக விடுப்பார். இதன்போது சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் இருப்பார்கள். அவ்வாறானதொரு அறிவிப்பாகவே இது அமையும் எனக் கூறப்படுகின்றது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv