ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றி சதிவலைகள் பின்னப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆபத்தான கட்டத்திலிருக்கும் ஜனாதிபதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு பிரதமர் அறிவித்துள்ளதாக, சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிங்கள ஊடக தலைவர், அவரது ஊடகம், ஜனாதிபதி ஆலோசகர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தாமரை மொட்டு குழுவினால் சமகால ஜனாதிபதி மீது கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கு வலு சேர்க்கு வகையில் செயற்பட வேண்டுமே தவிர அவரை விமர்சிக்க கூடாதென பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஒரு போதும் தேசிய அரசாங்கத்தை வீழ்த்தும் முயற்சியில் ஈடுபடவில்லை. எனினும் அரசியல் சூழ்ச்சியாளர்களினால் ஊடகங்கள் ஊடாக நாட்டில் இல்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கம் நிறைவுக்கு வந்துள்ளதாக போலி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இவ்வாறான ஆபத்துக்களிலிருந்து ஜனாதிபதியை காப்பாற்றும் நடவடிக்கையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ரணில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் காலாவதியாகியுள்ள கூட்டு அரசாங்க ஒப்பந்தத்தை விரைவில் புதுப்பிப்பதற்காக அமைச்சரவை திருத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு இரண்டு தரப்பினரும் எதிர்பாரப்பதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.