Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / புதிய அரசமைப்புக்கு ஆதரவு திரட்ட சர்வகட்சி கூட்டத்துக்கு மைத்திரி ஏற்பாடு!

புதிய அரசமைப்புக்கு ஆதரவு திரட்ட சர்வகட்சி கூட்டத்துக்கு மைத்திரி ஏற்பாடு!

அரசமைப்பு நிர்ணய சபையின் இடைக்கால அறிக்கைமீது விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் அனைத்துக்கட்சி மாநாடொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தேசித்துள்ளார்.

ஜேர்மன், பின்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

புதிய அரசமைப்புக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும் தீவிர பிரசரங்களை முன்னெடுத்துவருவதுடன், நாட்டைப் பிளவுபடுத்துவதற்காகவே புதிய அரசமைப்பு கொண்டுவரப்படவுள்ளது எனவும் சுட்டிக்காட்டிவருகின்றன. இதனால், மக்கள் மத்தியில் குழப்பநிலை உருவாகியுள்ளது.

இந்நிலையிலேயே புதிய அரசமைப்பின் முக்கியத்துவம் தொடர்பிலும், அதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையிலுமே சர்வகட்சிக் கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

புதிய அரசமைப்பு தொடர்பில் ஜனாதிபதிமைத்திரிக்கும் சிவில் அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு ஜனாதிபதி இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்துடன், தேசிய சுதந்திர முன்னணியும் ஜனாதிபதியை இன்று சந்தித்துள்ளது. நாளைய தினமும் முக்கிய சில கூட்டங்கள் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி கூட்டங்களின்போது முன்வைக்கப்படுகின்ற கருத்துகளை சர்வகட்சி கூட்டத்தின்போது ஜனாதிபதி எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடைக்கால அறிக்கை மீது எதிர்வரும் 30ஆம், 31ஆம் திகதிகளிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் அரசமைப்புச் சபையில் விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv