நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைமைக்கு என்னை காரணம் சொல்லாதீர்கள். இவையெல்லாம் ஜனாதிபதி மைத்திரிபாலவின் முடிவினாலேயே ஏற்பட்டன. பிரதமராக என்னை நியமியுங்கள் என்று நான் கேட்கவில்லை.
அவர்தான் என்னை அழைத்தார். நீங்களே இதற்கு பொருத்தமானவர் என கூறி, பதவியேற்கச் சொன்னார்“
இப்படி கூறி, அரசியல் குழப்பத்திற்கான முழுமையான காரணத்தை ஜனாதிபதி மைத்திரிபாலவின் பக்கம் தட்டிவிட்டுள்ளார், சில வாரம் பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச எம்.பி.
வெளிநாட்டு ஊடகமொன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை தெரிவித்தார்.
2014இல் சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. ஜனாதிபதி தேர்தலில் எதிரணியிலிருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார்.
ரணிலுடன் இணைந்து ஆட்சி நடத்தினார். சில மாதங்களின் முன்னர்தான் ரணிலின் உண்மை முகத்தை கண்டுகொண்டார். இதனால்தான் ஒக்ரோபர் 26ம் திகதி ஆட்சிமாற்றத்தை நிகழ்த்தினார்.
ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தப் போவதாக அவர் எமக்கு இரகசிய தகவலையும் அனுப்பியிருந்தார். நாடாளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மையை நிரூபித்து தருவதாகவும் கூறியிருந்தார். ஐ.தே.கவின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார். இதை நம்பியே நான் பிரதமர் பதவியை ஏற்றேன்.
நான் அதனை கேட்டுப் பெறவில்லை. நான்தான் பொருத்தமானவன் என அவர்தான் கூறி, என்னை பதவியேற்கும்படி கேட்டார்.
துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டிய நிலைமை ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்கு எதிராக ஐ.தே.க நீதிமன்றத்திற்கு போள்ளது. பொதுத்தேர்தலிற்கு பயந்தே அவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளார்கள்.
நான் பிரதமராக பதவி வகிப்பதற்கு எதிராகவும் வழக்கு தொடுத்துள்ளார்கள். நீதிமன்றங்கள்இடைக்கால தடை கட்டளை வழங்கியுள்ளன.
நான் அதை மதிக்கிறேன். நீதிமன்றங்களின் எத்தகையை கட்டளைகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும்போது நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.
இப்போதைய அரசியல் நெருக்கடிக்கு நாடாளுமன்ற தேர்தலே சரியான தீர்வென்பது சாதாரண குடிமகனிற்கும் தெரியும். இது எனது தனிப்பட்ட கருத்து. நான் நீதிமன்றங்களிற்கு அறிவுரை கூறவில்லை என தெரிவித்துள்ளார்.