Monday , November 18 2024
Home / முக்கிய செய்திகள் / கூட்டு அரசாங்கத்துக்குள் பிளவு – ஒட்டவைப்பதற்கு மைத்திரி தீவிர முயற்சி

கூட்டு அரசாங்கத்துக்குள் பிளவு – ஒட்டவைப்பதற்கு மைத்திரி தீவிர முயற்சி

பங்களாதேஷ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூட்டு அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய- சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார்.

பங்களாதேசுக்குப் புறப்படுவதற்கு முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலர், இந்த ஆண்டில் நடத்தப்படும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் அல்லது, கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரியிருந்தனர்.

அது ஒரு சூடான கருத்துக்கள் பரிமாறப்பட்ட கூட்டமாக இருந்தது. பங்களாதேசில் இருந்து திரும்பியதும் இது குறித்துக் கலந்துரையாடவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அவருக்கு பல தெரிவுகள் இருக்கவில்லை என்று, அமைச்சர் வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டது.

2015 நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அதன் கூட்டாளிகளும் 94 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தன. எனினும், இந்தக் குழு சிறிசேன மற்றும் மகிந்த என இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டிருந்தது.

மகிந்தவும், மைத்திரியும் முழமையான இணக்கப்பாட்டின் அடிப்படையில் இணைந்து செயற்பட்டிருந்தாலும் கூட, 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு மேலும் 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

ஜூலை 4ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐதேக அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் விஜேதாச ராஜபக்ச ஆகியோருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர் வட்டாரங்கள் தெரிவித்தன.

தமது செயற்பாடுகளை மூன்று மாதங்களுக்குள் சீர்படுத்தாவிடின், முழு ஐதேக அரசாங்கத்தையும் பதவிநீக்கம் செய்யக் கோரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மூத்த உறுப்பினர்கள் சிலரின் கோரிக்கையை கருத்தில் எடுக்க நேரிடும் என்று அவர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு ஐதேக அரசாங்கத்தை, அப்போதைய அதிபர் சந்திரிகா குமாரதுங்க கலைத்தது போன்ற முடிவை மைத்திரிபால சிறிசேனவும் எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி மூத்த உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளனர்.

அப்போது இரண்டரை ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் கலைத்து, புதிய தேர்தலுக்கு உத்தரவிட்ட சந்திரிகா குமாரதுங்க, அதன் பின்னர், ஜேவிபியுடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியிருந்தார்.

எனினும், 19ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ், தற்போதைய நாடாளுமன்றத்தை 2020 ஆம் ஆண்டு வரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்க முடியாது.

சந்திரிகா குமாதுங்க தனது சொந்த செல்வாக்கில் பதவிக்கு வந்தவர். ஆனால் சிறிசேன அவ்வாறில்லை அவர் பெருமளவில் ஐதேக வாக்குகளினால் தான் பதவிக்கு வந்தார்.

வரும் செப்ரெம்பருடன் முடிவடையும் இரண்டு ஆண்டுகால புரிந்துணர்வு உடன்பாடு முடிவுக்கு வந்ததும், தாம் கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போவதாக, ஒரு டசினுக்கும் அதிகமான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

எனினும் இவர்களின் அச்சுறுத்தலினால் அரசாங்கத்துக்கு உடனடி அச்சுறுத்தல் ஏற்படாது. கூட்டு அரசாங்கம் பிளவுபடக் கூடும். ஆனால், ஐதேக தலைமையிலான அரசாங்கம் பலமான நிலையில் தான் இருக்கும்.

எவ்வாறாயினும். இது அரசியலமைப்பு திருத்தத்துக்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான ஆதரவு விலக்கப்பட்டால் கூட, நாடாளுமன்றத்தில் 107 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐதேகவுக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க 6 ஆசனங்கள் மாத்திரமே தேவைப்படும்.

அதற்காக அவர்கள் 6 ஆசனங்களைக் கொண்ட ஜேவிபியையோ, 16 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ நாடக் கூடும்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv