பொதுஜன ஐக்கிய முன்னணி ஊடாக ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என அறியமுடிகின்றது.
மேற்படி முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியை சமல் ராஜபக்ஷவுக்கு வழங்கி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி “கதிரை’ சின்னத்தில் களமிறங்கவேண்டும் என முன்வைக்கப்பட்ட திட்டமே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
2018 ஜனவரியில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கை’ சின்னத்திலேயே களமிறங்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னர் அறிவித்திருந்தார்.
எனினும், மஹிந்த தலைமையிலான பொது எதிரணியையும் இணைத்துக்கொண்டு பயணித்தாலேயே வெற்றி சாத்தியமாகும் என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியிருந்ததுடன, இருதரப்பையும் இணைக்கும் முயற்சியையும் தொடர்ந்தும் முன்னெடுத்துவந்தனர்.
இதன் ஓர் அங்கமாகவே பொதுஜன ஐக்கிய முன்னணியின் தற்போதைய பொதுச் செயலாளரான முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவை தலைவராக்கி பொதுச் செயலாளராக சமல் ராஜபக்ஷவை நியமிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இதற்கு சம்மதம் வெளியிட்டால் அது ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் பயணத்துக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்றும், தனது அரசியல் பயணத்துக்கு ஏதோவொரு வகையில் அது பாதகத்தை தடையை ஏற்படுத்திவிடும் என்றும் கருதியதாலேயே ஜனாதிபதி இந்த யோசனைக்கு பச்சைக்கொடி காட்டவில்லை எனத் தெரியவருகின்றது.
1994ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிட்டே தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.