தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு சற்று முன்னர் முடிவடைந்தது. ஜனாதிபதி செயலகத்தில் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பில் இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வழக்கமாக முக்கிய சந்திப்புக்களில் இரா.சம்பந்தனே அதிகம் பேசுவது வழக்கம். ஆனால் இன்று இரா.சம்பந்தன் பேசவில்லை. மாவை சேனாதிராசாவிடம், பிரச்சனைகளை பேசும்படி குறிப்பிட்டார்.
பின்னர் ஏனைய எம்.பிக்களும் பிரச்சனைகள் குறித்து பேசினர்.
தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது, காணிகள் விடுவிக்கப்படாதது, பௌத்த பிக்குகளால் கன்னியா, நீராவியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் குறித்து கூட்டமைப்பு தரப்பு விரிவாக குறிப்பிட்டது.
இதை கேட்டுக் கொண்டிருந்த மைத்திரி, “பௌத்த பிக்குகளால் தமிழர்களிற்கு மட்டுமல்ல, எனக்கும் பெரிய தலையிடியாகத்தான் இருக்கிறது. இங்கு பிரச்சனைகளை தந்து கொண்டிருக்கிறார்கள்“ என்றார்.
எதிர்வரும் 30ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும்போது, காணி விடுவிப்பு தொடர்பான அறிவித்தலை வெளியிட வேண்டுமென மாவை சேனாதிராசா குறிப்பிட்டார். இதன்போது, குறுக்கிட்ட இரா.சம்பந்தன், அறிவித்தல் விடுப்பதல்ல, காணியை விடுவிக்க வேண்டுமென்றார். எனினும், ஜனாதிபதி அது குறித்து தெளிவான பதில் அளிக்கவில்லை.
இன்று ஜனாதிபதி நேரநெருக்கடியான பல நிகழ்ச்சிகளை கொண்டிருப்பதாலும், சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய அதிகாரிகளோ, ஜனாதிபதி செயலாளர் போன்றவர்ளோ இருக்காததாலும் மீண்டும் இரண்டு தரப்பும் சந்தித்து பேசுவதென முடிவாகியது. எதிர்வரும் 28ம் திகதி காலை 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரும், அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் அனைவரையும் உள்ளடக்கியதாக இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.