முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரா அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரா என்பது தொடர்பில் அவரே தெளிவுபடுத்த வேண்டுமென, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் என கூறியுள்ளதாகவும், எவ்வாறெனினும் அவர் இது தொடர்பில் தெளிவுபடுத்த வண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமையும், அதேபோல் சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்காமல் விட்டமை தவறான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் யாப்பிற்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு எதிராக, சரியான நேரத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் விட்டமையே பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் சாந்த பண்டார உள்ளிட்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென மஹிந்த ராஜபக்ச கூறியதாகவும், எனினும் அரசியலில் இவ்வாறான முரண்பாடுகள், பிரசினைகள் எழுவது சாதாரணமான விடயமெனவும், அதனை எதிர்கொள்ள தாம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்றே கூறுகின்றார், அவ்வாறாயின் அவர் எம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும். வேறு கட்சியுடன் இணைய முடியாது. அவ்வாறு இணைந்து செயற்படுவாராயின் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் இல்லாமல் போகும்” எனவும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.