புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது பற்றி ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொது எதிரணி இன்று கொழும்பில் கூடவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அனைத்து பொது எதிரணி எம்.பிக்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மஹிந்தவுக்குச் சார்பான சட்டவல்லுநர்கள் சிலரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அரசமைப்பு நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளன. சட்டத்துறை நிபுணரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு, புதிய அரசமைப்பு சம்பந்தமாக நாடு தழுவிய ரீதியில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவதற்குரிய திட்டத்தையும் மஹிந்த அணி வகுக்கவுள்ளது.
புதியதொரு அரசமைப்பு அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே பொது எதிரணி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தேர்தல், பொருளாதார நிலைமை உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளன.